Thursday, March 3, 2011

கோடி சுகம்


அரக்கப் பறக்க
அலுவலகம் புறப்படும்போது
'கொஞ்சம் இருங்க'ன்னு
வாசலில் நிறுத்தி
நெற்றியில் இருந்து
சிந்திச் சிதறி
மூக்கு நுனியில்
முகாமிட்டு நிற்கும்
விபூதித் துளிகளை
விரல்களால் ஒத்தி
எடுத்து விட்டுட்டு
'உஃபு'ன்னு ஊதி
உன் 'மூச்சு' காற்றால்
என் முகம் துடைத்துவிட்டு
'இப்பப் போங்க'ன்னு
உத்தரவிடுவாய்
அரைமனதோடு
அரைகிலோமீட்டர் போய்
அதற்குமேல் முடியாமல்
சிந்திய விபூதியாய்
மனசு வழிய
அசதியாய் இருக்குன்னு
வசதிக்காய் பொய் சொல்லிட்டு
வெட்கத்தோடு திரும்பிவந்து
உன்மடியில் விழுவதே
கோடி சுகம்
சட்டையை போட்டபின்
அந்துபோன பட்டனைப் பார்த்து
நான் அலற
ஊசி நூலோடு
உள்ளிருந்து ஓடி வந்து
என் 'சட்டையை'
கழற்ற வேண்டாமுன்னு
பட்டனை தைத்துவிட்டு
என் நெஞ்சோடு
நெருங்கி வந்து
பல்லால் நூல் கடித்து
'ம்' சரியாப் போச்சி
இதுக்கு எதுக்கு
டென்சன்?னு
எனக்குள் ஒரு
புதிய படபடப்பை
புறப்பட வைப்பாயே
அதுவும் ஒரு
கோடி சுகம்!
இதுக்காகவே
நானாக அத்துப்போட்ட
பட்டன்களும்
ஏராளம்தான்.....
நடுத்தர வர்க்கத்தின்
மையப்புள்ளியான
நாத்தனார், மாமியார்
பிரச்சினையில்
நானும் நீயும்
சண்டை போட்டுக்கொள்ள
ஆத்திரம் தீர
உன்னை
அறைந்துவிட்டு
அலுவலகம் சென்று
மாலையில் நான்
வீடு திரும்பும்போது
தலைநிறைய மல்லிகையை
சூடிக்கொண்டு
வாசலில் நின்றவண்ணம்
தலைக்கு மேல்
சமாதானப்புறாவை
பறக்கவிடுவாயே....
கோபம் குறையாதவன்போல்
நான் பொய்
ஜம்பத்தோடு
அறையில் நுழைவேன்
மெத்தை, தலையணையை
ஒருவிதமாய் அடுக்கி
வைத்திருப்பாய்
மெல்லிய நறுமணம் வீசும்
ஊதுபத்தி எரிந்துகொண்டிருக்கும்
ஒருவழியாய்
காலைச் சண்டையை
கட்டில் சண்டையில்
கொண்டுவந்து
சுபம் செய்யும்
உன் பெண்மையின்
லாவகம் ஒரு
கோடி சுகம்!
நான் சாப்பிடும்போது
இருமினால்
நான் இருக்கும்போது
எவ நினைக்கிறா?ன்னு
பொறை விழாம
என் தலையில் தட்டி
உன் பொறாமை
காட்டுவாயே
அதுவும் ஒரு
கோடி சுகம்!
நான் சாப்பிட்டு முடிந்ததும்
கொஞ்சம் மிச்சம்
வக்கக் கூடாதா?ன்னு
தட்டுக்கிண்ணத்தில்
ஒட்டிக்கிடக்கும்
மிச்சத்தை விரல்களால்
வழித்து
நாவில் சுவைப்பாயே
அதுவும் ஒரு
கோடி சுகம்!
ஒருமுறை....
காய்ச்சலில் நீ
படுத்துக்கிடக்க
நளனும் எங்க
சாதிதானேன்னு
அடுப்பங்கரை புகுந்து
நான் வீராவேசம் காட்ட....
குக்கர் வெயிட்டு
பிடுங்கி அடிச்சு சோறு சிதறி
நான் சிதறி ஓடி வர
அலறிக் கொண்டு ஓடி வந்து
சேலை தலைப்பால்
என் தலை துவட்டிக்கொண்டே
எனக்கெல்லாம் சுமங்கலியாப்
போய்ச் சேரணும்னு
ஆசை இல்லீங்க.
எனக்குப் பின்னாடி கெடந்து
நீங்க கஷ்டப்படக் கூடாது.
ஒரு சோறு வடிக்கிறதுக்குக்கூட
லாயக்கில்லாத மனுஷன்
உங்களை விட்டுட்டு
நான் முன்னாடி போய்
எனக்கு பின்னாடி கெடந்து
நீங்க கஷ்டப்படக் கூடாது!
உங்களை சீரும் சிறப்புமா
வழி அனுப்பிட்டுதான்
நான் சாகணும்னு
கதறி அழுதாயே....
அந்த சோகம்கூட
ஒரு கோடி சுகம்தான்!
தலையணை மீது
என் லுங்கியை மடித்து
போட்டுக்கொண்டு
படுத்து உறங்குவாய்
'ஏன்' என்று கேட்டால்....
அப்பத்தாங்க உங்க கூடவே
படுத்திருக்கிறாப்புல
ஒரு பாதுகாப்பு உணர்வுன்னு
வெட்கிச் சிரிப்பாயே
அதுவும் ஒரு கோடி சுகம்!
ஏங்க எந்திரிங்க -
ஊரு உலகத்துல
அவனவன் காலையில
காலாகாலத்துல எந்திருச்சி
வீட்டு வேலையைப் பாக்குறாங்க
'எனக்குன்னு வாச்சிருக்கீங்களே
துப்பு கெட்ட மனுசனா'
ராட்சசக் குரலின் அலறலில்
கோடி சுகக் கனவுகள்
சிதறிய கண்ணாடித்
துகள்களாயின!
"போங்க.... போங்க.....
ஆஃபீஸ் போறதுக்குள்ள,
ஒரு அஞ்சு குடம் தண்ணிய
பிடிச்சுக் குடுத்துட்டுப் போங்க,
தண்ணி லாரிகிட்ட
ஆம்பளைக போனாதான்
இந்தத் தெரு பொம்பளைக
பல்லை இளிச்சுக்கிட்டு
தண்ணி விடுவாளுக"
வழக்கமான இரைச்சலோடு
வாழ்க்கை துவங்கிடுச்சு!
இருந்தாலும்....
இந்தக் கோடிச் சுக கனவு
ஒருநாளாவது அவளுக்கு
வரப்புடாதா?

No comments:

Post a Comment